ஸொவாங்கம் தம்மவொங்ஸா | Souvankham Thammavongsa
தமிழில்: கண்ணையன் தட்சிணாமூர்த்தி | Translated by Kannaiyan Daksnamurthy
‘Bozo’ was first published in The New Yorker. Translated and published in Tamil with permission of Souvankham Thammavongsa and The Wylie Agency (UK) Limited., by Two Shores Press © 2024. All rights reserved.
அடுக்கி வைக்கப்பட்டிருந்த பாட்டில்களுக்கும் கண்ணாடி டம்ளர்களுக்கும் முன்பாக அவன் நின்றிருந்தான். அந்த பாட்டில்களில் இருந்த ஒவ்வொன்றும் என்ன மாதிரி ருசிக்கும் என்றும், எதோடு எதை ஜோடி சேர்க்க வேண்டும் என்றும் அவனுக்குத் தெரியும். அவன் மதுக்கூடத்தின் பணியாள். நீங்கள் விரும்பினால் உங்களுக்காக ஒரு பானத்தை அவனால் கலந்து தர முடியும். முன்புறமாகச் சாய்ந்து கேட்டால் போதும்.
அவன் செய்யக்கூடிய ஒன்றுக்கு நான் ஆசைப்படுகிறேன்; வேறு யாரும் பெற்றிராத ஒன்றுக்காக. எனக்காக அதைச் செய்து தர முடியுமா என்று கேட்டதும் அவன் தலையசைத்தான். அவன் மௌனமாகி யோசிப்பதைக் கண்டேன். அவன் மனதில் இருப்பதைச் செய்ய வேண்டுமானால் எதையோ தேடியெடுக்க வேண்டும் என்பது போலிருந்தது. ஒரு பிளாஸ்டிக் பைக்குள் துழாவியவன், எதையோ பிடுங்கி எடுத்தான். அந்த பானத்தை என்னிடம் கொண்டு வந்த போது அது தண்ணீரைப் போலிருந்தது. அதன் நடுவில் இதய வடிவில் புதினா இலை ஒன்று கிடந்தது. சற்று நேரம் மிதந்த அந்த இலை பின்னர் மிதக்கவில்லை.
அவனிடம் எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நேரே அவன் இருந்தான். அந்தக் கூடத்தில் இருந்த மற்றவர்கள் கேட்ட பானங்களை கலக்கிக் கொண்டிருந்தான். எனவே அவன் வேலை செய்வதை கவனித்தேன். அதை மட்டும்தான் அவன் செய்து கொண்டிருந்தான். உள்ளங்கையையும் விரல்களையும் விரித்து, ஒரே சமயத்தில் நான்கு கிளாஸ்களை எடுத்து வரக்கூடியவன். திரும்பத் திரும்ப அப்படியே செய்தான். ஒருமுறை கூட அவன் தடுமாறியதும் இல்லை; எதையும் உடைத்ததும் இல்லை. ஆரஞ்சுகளையும் எலுமிச்சைகளையும் நறுக்கி, ஐஸ் அள்ளிப்போட்டு, உறிஞ்சு குழல்களைக் கொண்டு பானங்களை அலங்கரித்தான். கூடத்தில் இருந்தவர்கள் எந்த பானத்தை விரும்புவார்கள் என்று அவர்கள் விரும்புவதற்கு முன்பாகவே அவனுக்குத் தெரிந்துவிட்டது போலிருந்தது. அவனுக்குப் பக்கத்திலிருந்த சிறிய மிஷினிலிருந்து ரிப்பன்களைப் போல ஆர்டர்கள் சுருள்சுருளாக வந்து கொண்டிருந்தன.
யாரிடமும் பேசுவதற்கு அவன் முயலவில்லை. நடந்து போய் எதையும் கேட்கவும் இல்லை. எதைக் குறித்தும் ஆர்வத்தோடு இருந்ததாகவும் தெரியவில்லை. பணிப்பெண் ஒருத்தி, அவனுக்குப் பின்னே நிறைய இடம் இருந்த போதும், தன்னுடைய மார்பகங்களை அவன் மீது தேய்க்கும்படியாக உரசிக் கொண்டு போனாள். திரும்பி வருகையில் அவனைக் கடக்கும்போது அவனுடைய தோளைத் தடவினாள். இப்போதும் அவன் எதிர்வினையாற்றவில்லை. வேலையில் இதெல்லாம் சகஜம். அவளுடைய செய்கையை அங்கீகரிக்கும் விதமாகத் திரும்பிப் பார்த்துப் புன்னகைக்கவும் இல்லை; அவளுடைய ஷிப்ட் எப்போது முடிகிறது என்றோ, வேலை எப்படிப் போகிறது என்றோ, பேச்சில்லை.
நான் அவனை நோக்கினால் அவன் என்னைப் பார்த்து முறுவலிப்பான். நான் சற்று முன்னோக்கி வளைந்தால் என்னருகே வருவான். அவனுடைய கவனத்தை ஈர்ப்பது மிகவும் எளிது. என்னுடைய இடத்துக்கு அவனை அழைக்க விரும்பினேன்; அவனுடைய ஷிப்ட் முடிந்து விட்டதா எனக் கேட்க விரும்பினேன்; ஆனால், ஒவ்வொரு இரவிலும் அம்மாதிரியான கேள்விகளை எதிர்கொள்பவன் போலிருந்தான். இம்மாதிரி கேட்கிற எல்லாரோடும் போகிறவனா? அல்லது, தேர்ந்தெடுத்த சிலரோடு மட்டும்தானா? சரி, அவன் என்னுடைய இடத்துக்கு வந்தால்? ‘உள்ளே நுழைத்து ஆட்டிவிட்டால்’ எல்லாம் முடிந்து விடும். ஆனால் ‘கொஞ்ச நேரம் ஆட்டுவதை’ நான் விரும்பவில்லை. அவனுக்கான ஏதோ ஒன்றாக இருக்க ஆசைப்படுகிறேன். ஓர் இரவுக்கு மேலும் நீடித்திருக்கக் கூடிய ஏதோ ஒன்றாக. ஏன் அதற்கு நான் ஆசைப்படுகிறேன் என்று தெரியவில்லை என்றாலும், அந்த ஆசை இருக்கிறது.
ஆன்லைன் வழியான தொடர்பில் நாங்கள் இருந்திருந்தால், அவனுடைய புகைப்படத்தைப் பார்த்திருப்பேன். விருப்பம் இருக்கிறது என்பதைத் தெரிவிக்கும் விதமாக ஒரு ‘ஹார்ட்’ஐ கிளிக் செய்திருப்பேன். குறுந்தகவல் அனுப்பி நேரிடையாகச் சொல்லியும் இருப்பேன். அவன் பதில் சொல்லாமல் இருந்தால் அடுத்த முகத்தைப் பார்க்கப் போயிருப்பேன். நான் எதிர்வினையாற்றுவதற்கே நூற்றுக்கணக்கான செய்திகள் இருந்தன. அதுவும் இருபத்துநான்கு மணி நேரத்துக்குள்ளாக. தயார் என்று சொல்லிய முகங்களும் உடம்புகளும் வரிசைகட்டி நின்றன. ‘நான் இப்படி’ என்று அறிவித்திருந்தவர்களில் எவர் சொல்வது சரி என்று யாருக்குத் தெரியும்? அந்த நல்ல தோற்றங்கள் சிறப்பான ஒளியமைப்பு அல்லது முகஸ்துதியான கேமரா கோணத்தில் உருவாகி இருக்கலாம்; அல்லது பழைய படங்களாகவும் இருக்கலாம். அந்த முகங்கள் அவர்களுடையவைதானா? அவர்களைப் பற்றிச் சொன்னவை உண்மை என்று நான் எப்படித் தெரிந்து கொள்வது?
இப்படியான நிலைமையில் நான் இங்கே காண்பது நிஜமல்லவா? எந்த ஒளியிலும் எந்தக் கோணத்திலும் அவனை நான் பார்க்க முடியும். அவனைப் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் நான் அவனைப் பற்றி அறிய விரும்பவில்லை. சற்றுத் தொலைவிலிருந்தே அவனை நான் விரும்புகிறேன். விவரங்களை அறிந்தால் ஏமாற்றமாகிவிடும். பார்த்துக் கொண்டே நானே கதைகளை உருவாக்கிக் கொள்ள விரும்புகிறேன். தினமும் மாலையில் அவன் எங்கிருக்கிறான் என்று எனக்குத் தெரிந்திருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. அதாவது ஒரு தொலைபேசி அழைப்புக்கோ குறுஞ்செய்திக்கோ நான் காத்திருக்க வேண்டியதில்லை. எனக்கு அவனைப் பார்க்க வேண்டும் எனத் தோன்றினால் எனக்கு அது இயலும்; எங்கே போக வேண்டும் என்று தெரியும்.
ஆறு மாதங்களாக வாரத்திற்கு ஒரு தடவை, செவ்வாய் அல்லது வியாழன் இரவில் இங்கு வருகிறேன். கூட்டம் அதிகம் இல்லாததால் முன்பக்கமாகச் சாய்ந்து எனக்கு எதையாவது கலந்து தரும்படிக் கேட்க முடிகிறது. சில சமயம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு வராமலும் இருந்து விடுவேன். ஒழிவான பொழுதுகள் எனக்கு அதிகமாக இருப்பதாக நான் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. நான் மிகவும் பிஸியான பெண்ணல்லவா? நான் எங்கிருக்கிறேன், அல்லது, யாரோடு இருக்கிறேன் என்று அவன் யோசிக்க வேண்டும் என்றும் நான் விரும்பினேன். அவனைப் போன்ற வசீகரமான ஆடவனுக்கு எந்நேரத்திலும் விரும்பியபடி ஆள் கிடைக்கக் கூடுமென்று எண்ணிக் கொண்டேன். அவன் சற்றே முன்னோக்கிச் சாய்ந்தாலே அவனுக்கு எது பிடிக்கிறது என்று பெண்களுக்குத் தெரிந்து விடும். நேரத்தைத் தனியாகச் செலவிடுபவன் போலவும் தெரியவில்லை; தனிமையை உணர்ந்தவன் போலவும் தோன்றவில்லை; எதற்காகவும் ஏங்கிக் கிடந்தவன் போலவும் தெரியவில்லை.
ஆனால் வெட்கச் சுபாவியாகத் தெரிந்ததுதான் ஆச்சரியம். பொதுவாகவே யாரும் வெட்கப்படுவதில்லை என்பது என் அபிப்ராயம். காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கு அது ஒரு வழி.
தன் முன்னிருந்த மேடையைத் துணியால் துடைத்தான்.
வீட்டில் சுத்தப்படுத்தும் வேலையைச் செய்வது எப்படி என்று தெரிந்தவனாக இருக்க வேண்டும். பாத்திரங்களைக் கழுவி வைக்க வேண்டுமென்று அவனிடம் சொல்ல வேண்டியிருக்காது. கண்ணாடி டம்ளர்களைப் பளிச்சென்று வைத்திருப்பான். ஷெல்ப்களில் இருந்து அவை பளபளவென மின்னும். இம்மாதிரியான இடத்தில் வேலை செய்வதால், வாஷ் ரூமிலிருந்து ஈரக் கைகளைப் பேண்டில் துடைத்தபடி வருகிறவர்களையும், உணவின் மீது தும்முகிறவர்களையும், எல்லாவற்றின் மீதும் பெருமூச்சு விடுபவர்களையும் பார்க்க நேர்வதால், அவன் வெளியிடத்தில் சாப்பிட விரும்ப மாட்டான் என்றே தோன்றுகிறது.
அவனோடு உரையாடுவதும் கஷ்டம். சொற்ப வார்த்தைகளே பேசினான்.
ஆனால் ஒரு நாள் என்னிடம் சகஜமாகப் பேசினான். பரிச்சயமான முகம் என்பதால் இருக்கலாம். ஏற்கெனவே வந்திருப்பவள் என்று அவனுக்குத் தெரிந்திருந்தது. தன்னுடைய பெயரைச் சொன்னான். சிறிய நகரத்தில் வளர்ந்ததாகச் சொன்னான். எனவே வெட்க சுபாவம் நிஜமானதாக இருக்கலாம். திங்களும் புதனும் அவனுக்கு விடுமுறை.
அவனுடைய கோடைகாலத் திட்டம் பற்றிக் கேட்டேன். யோசித்துக் கொண்டிருப்பதாகவும், முன்பு ஹவாய் பீச்சுகளுக்குப் போவது வழக்கம் என்றும் சொன்னான். நான் அங்கே சுற்றுலா போகவிருப்பதாகவும் என் தொழில் என்னவென்றும் சொன்னேன். பொதுவாக என் தொழிலைப் பற்றிச் சொல்வது எனக்கு வழக்கமில்லை. நான் “பொய்யாகச் சொல்வது போல் தெரியலாம், ஆனால் நிஜமாகவே அதைத்தான் செய்கிறேன்” என்றேன். அவன் சிரித்துவிட்டு, மாடலாக இருந்திருப்பதாகச் சொன்னான். அதுவும் பொய் போலவே இருந்தது. ஆனால் அவனுடைய உடலையும் முகத்தையும் பார்க்கையிலும், மற்றவர்களால் பார்க்கப்படும் போது எந்த அளவுக்குச் சௌகரியமாக அவன் உணர்வான் என்று யோசிக்கையிலும், எந்த அர்த்தமும் தராத விதமாக அவனை நான் பார்க்கும்படி என்னை அனுமதித்திருப்பதிலும், என்னால் ஒன்றை மட்டும் சொல்ல முடிந்தது: மற்றவர்களின் பார்வையில் தன்னுடைய வரவேற்பறையை எவ்வாறு அமைத்துக் கொள்வது என்று அவனுக்குத் தெரிந்திருந்தது.
அவனுக்கு என்ன வயதிருக்கும் என்று யோசித்தேன். முப்பதுகளின் தொடக்கமாக இருக்கலாம் என்று அனுமானித்து விட்டு அவனிடம் கேட்டேன். கிட்டத்தட்ட சரியாக அனுமானித்து இருக்கிறேன். முப்பத்தெட்டு வயது. அவனுடைய கை விரல்களில் மோதிரம் எதுவும் இல்லை. பொறுப்பேற்றுக் கொள்ள முடியாதவனா? ஒருபோதும் பொறுப்பேற்றுக்கொள்ள விரும்பாதவனா? அவனுக்கு விருப்பமிருந்தும் கைகூடவில்லையா? கிட்டத்தட்ட நாற்பது வயதானவனாக அவன் இருப்பதே எனக்குப் பிடித்திருந்தது. அதாவது அவனுக்கு நான் எதையும் கற்றுத் தர வேண்டியிருக்காது; அல்லது எந்த மாதிரியாவது இருக்க வேண்டும் என்று உதவ வேண்டியும் இருக்காது. அவன் மற்றவர்களைப் போல் இருபதுகளில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தை ஆரம்பித்து, முப்பது வயதாகும் போது ஒரு வீட்டை வைத்திருப்பவன் அல்ல. அதற்குப் பிறகு என்னாகும்? புறத்தே ஓர் உறவு, அதைத் தொடர்வது, அல்லது விவாகரத்து. எல்லாமே வேடிக்கைக்காக. என் வயதைக் கேட்காமல் அவன் கண்ணியமாக இருந்து விட்டான். அவனை விடச் சில வயது மூத்தவள் என்றாலும், என்னைப் பார்த்தால் அப்படித் தெரியாது.
அந்த ரெஸ்டாரெண்டுக்குப் போகும் ஒவ்வொரு தடவையும் மதுக்கூடத்தில் அமர்ந்து அவன் வேலை செய்வதை கவனிப்பேன். அவன் யாரிடமும் கோபமாகக் கத்தியதில்லை; எவரும் அவனிடம் கனிவின்றிப் பேசியதும் இல்லை. அவனிடம் தன்னம்பிக்கை வெளிப்பட்டது. அவன் பானங்களைக் கலப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த எனக்கு அவற்றின் மீது பொறாமை உண்டானது. மற்றவர்களின் வாய்க்குப் போகும் அந்த பானங்களை மேஜைகளுக்கு அவன் எடுத்துப் போவதற்கு முன்பாக, நானே குடித்துவிட விரும்பினேன். பானங்களைக் கலக்காத சமயங்களில் மதுக்கூடத்தில் அமர்ந்திருக்கும் எங்களுக்கு உணவைப் பரிமாறினான். விசேஷமாக எதுவும் கிடையாது. பாலே, மென்மையான உருளைக்கிழங்கு குச்சி வறுவல், இறைச்சித் துண்டங்கள். எனக்கு அவன் மீது பரிதாபம் ஏற்பட்டது.
வருஷத்துக்கு ஒருமுறை அவன் ஹவாய் பீச்சுக்குப் போக விரும்புகிறான். அதற்கு நானே ஏற்பாடு செய்துவிட விரும்புகிறேன். சொல்லப் போனால் மீண்டும் அவன் இங்கே வந்து யாருக்கும் பரிமாற வேண்டிய அவசியம் ஏற்பட வேண்டாம் என்பதே என் ஆசை.
ஏன் என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், எல்லாவற்றையும் அவனுக்குத் தர விரும்பினேன். எங்கிருந்து இந்த உணர்வு வந்தது? ஏன் அந்த உணர்வுகள் இங்கே தோன்றின? இந்த உணர்வுகளைப் பற்றி அவனிடம் என்னால் சொல்ல முடியவில்லை.
சில வாரங்களுக்கு முன்னதாகத்தான் ஒரு அக்வேரியத்திற்குப் போயிருந்தேன். ஆழங்காண முடியாத இடம் என்று அங்கே ஓரிடம் இருக்கிறது. எனக்கு நீச்சல் தெரியாது. டைவிங் அல்லது ஸ்நார்கெலிங் (தண்ணீருக்கு மேலேயிருந்து குழாய் மூலம் ஆக்ஸிஜனை சுவாசித்துக் கொண்டு நீரில் நீந்துவது) செய்ததில்லை. பொதுவாகவே நீருக்குள் ஒரு பொருளை நோக்கி நீந்திப் போகும்போது அது விரைந்து விலகிப்போகும்; எதையும் தெளிவாகவும் பார்க்க இயலாது. ஆனால் அந்த அக்வேரியத்தில் இருந்த பாதுகாப்பான ஏற்பாடுகள் எனக்குப் பிடித்துப்போயின. நானே மூச்சு விட முடியும், பார்க்க முடியும். நீச்சலடிக்கக் கற்றுக் கொள்ள வேண்டியதில்லை; மூழ்கி விடுவோமோ என்று பயப்படவும் வேண்டியதில்லை.
ஒரு மீன் கூட்டம், பெரிய பந்தைப் போல் சுழன்று சுழன்று நீந்தியதை நினைத்துக் கொண்டேன். மூன்று நகம் கொண்ட இறால், மூன்று இதயம் கொண்ட பெரிய ஆக்டோபஸ்; ஒளிர்ந்த ஜெல்லி மீன். அவனோடு அங்கே போய், அவற்றை அவன் பார்த்துக் கொண்டிருப்பதை நான் ரசிக்க விரும்பினேன். இருளில் அவனைப் பார்க்க வேண்டும். அங்கேயும் அவன் அழகனாக இருக்கிறானா என்று பார்க்க வேண்டும். இப்போதுதான் சந்தித்த ஒருவனிடம் இம்மாதிரி கேட்பது வினோதமாகத் தோன்றலாம். முன்பக்கமாகச் சரிந்தேன், கிட்டத்தட்ட முயனறேன், ஆனால் தைரியத்தை இழந்துவிட்டேன்.
நான் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்திருந்தவற்றைச் சிறிய டப்பாக்களில் எடுத்துப் போட்டான். அவை, திரவங்கள் கசியாத, பிளாஸ்டிக் மூடியுடன் இருந்த வட்டமான பேப்பர் டப்பாக்கள். திரவமாக இல்லாதவற்றுக்குப் பழுப்பு நிற பேப்பர் டப்பா. எல்லாவற்றையும் ஒரு தாள் பையில் வைத்துப் பரிசுப் பொருள் போலச் சுற்றிக் கொடுத்தான். மிச்ச உணவை வைத்திருந்த மற்றவர்களுக்கு என்ன செய்கிறான் என்று கவனித்தேன். பழுப்பு நிற பேப்பர் டப்பாக்களை எடுத்துவந்து தொப்பென்று அவர்கள் முன்னே வைத்தான். தத்தமது மிச்சத்தை அவரவர்களே டப்பாக்களில் அடைத்துக் கொள்ள வேண்டும். திரவமாக இருந்தவற்றுக்கு பிளாஸ்டிக் மூடியுடைய வட்டமான டப்பாக்கள் அவர்களுக்குத் தேவைப்படுமா என்று அவன் கவலைப்படவில்லை. நான் மற்றவர்களைப்போல் இல்லை என்று எண்ணிக் கொண்டேன். ஸ்பெஷல் என்று நினைத்தேன்.
சில நாள் கழித்துத் திரும்பவும் வந்த நான், மீண்டும் முயற்சி செய்யலாம் என நினைத்தேன்: அக்வேரியத்திற்கு என்னுடன் வருமாறு கேட்பது.
வழக்கம்போலவே அவன் என்னைப் பார்த்து முறுவலித்தான். நான் கேட்டேன். அவன் காதில் விழவில்லை. இடது காதை என்னிடம் திருப்பினான். மீண்டும் சொன்னேன். அவனிடம் சொல்லி முடிப்பதற்குள் ஒரு வருஷம் கழிந்து விட்டது போலிருந்தது. விலாவாரியாகச் சொல்ல வேண்டியிருந்தது. எனக்குப் பதற்றமாகவும் பயமாகவும் இருந்ததை முகத்திலும் வெளிப்படுத்தினேன்.
சற்று நேரம் மௌனமாக இருந்து விட்டுச் சொன்னான்: “நல்ல யோசனையாகப் படவில்லை” தலையாட்டிய நான் என்னுடைய ஏமாற்றத்தை அவன் அறியும்படிக் காண்பித்தேன். “எனக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாள்” என்றும் சொன்னான். ‘என்னுடைய கேர்ள் பிரண்டோடு’ என்று எப்போதாவது அவன் சொல்லி இருக்கிறானா என்று யோசித்தேன். அப்படிச் சொல்லாமல் தவிர்த்தது தற்செயலானது அல்ல. டிப்ஸுக்காகவும், எவருக்கேனும் போலியான நம்பிக்கையைத் தருவதற்காகவும், அவன் தவிர்த்திருக்கலாம். கேர்ள் ஃபிரண்ட் இருக்கிறாள் என்று தெரியப்படுத்தி இருந்தால் அவன் அன்பற்றவனாக, கொடூரனாகக் கூட இருந்திருக்கலாம்.
நான் அவனிடம் கேட்கவில்லையே! கேட்டேனா? வயதைத்தான் கேட்டேன். விடுமுறை தினங்களில் என்ன செய்கிறானென்று கேட்டேன். வாழ்வில் ஒரு துணை இருந்தால் இருவரும் ஒருவர் என்றே உணர்வதால், ‘நான்’ என்று சொல்லும் போது அது இதுவரையுமே குறிக்கும்!
“எவ்வளவு காலமாகச் சேர்ந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டதற்கு மூன்றாண்டுகள் என்றான். மூன்றாண்டுகள் என்பது நிச்சயம் உறுதிப்பட்ட உறவுதான்; எனவே அதைப் பற்றிச் சொல்வதற்கு அது தகுதியுடையதே.
“நிஜமாகவே அது எனக்கு மகிழ்ச்சியானதுதான்” ஏற்கெனவே ஏராளமான எண்ணிக்கையில் தன்னிடம் இருக்கின்ற ஒரு பொருளையே மீண்டும் பெற்றுக் கொள்பவன் போலச் சொன்னான்.
நான் எனக்கான சற்று அவகாசத்தை எடுத்துக் கொள்ளும் விதமாக அவன் அகன்றான். சத்தமிடாமல் அங்கிருந்து போய்விட நான் விரும்பவில்லை. எனக்குப் பசி. எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டும். மதுக்கூடத்தில் எனக்கருகில் அமர்ந்திருந்தவர் என்னைப் பார்த்துச் சொன்னார்: “அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரண்ட் இருப்பது எனக்குத் தெரியும்” மேலும் விவரங்களைச் சொன்னார்: “நான் நியூயார்க்கில் இருந்து வருகிறேன். சில வாரங்களுக்கு முன் கேர்ள் ஃபிரண்டை அழைத்துக் கொண்டு அங்கே வந்தான். சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைப் பற்றி என்னிடம் கேட்டான்.
முன்னாளைய நியூயார்க் என் மனதில் ஓடியது. பலமுறை அங்கே போயிருக்கிறேன். அக்காலத்தில் மக்கள் அங்கே சாலையைக் கடப்பதை நினைத்துப் பார்த்தேன். அதுதான் நினைவுக்கு வந்தது. இஷ்டம் போல் சாலையின் குறுக்கே கடப்பார்கள். ஒருவழிப் பாதை என்ற அறிவிப்பைக் கண்டு நம்பிக்கையோடு கடந்து போவது ஆனந்தமாக இருக்குமே என்று எண்ணினேன்.
இவர்கள் இருவரும் அங்கே போய் உல்லாசமாகத் திரிந்திருக்கின்றனர்.
மூன்றாண்டுகளுக்கு முன் என்ன நடந்தது என்று யோசித்தேன். உலகமே கதவடைத்துக் கொண்டது. பெருந்தொற்று. மக்கள் சீக்கிரமாக ஜோடியானார்கள். பிழைத்திருக்கும் வேட்கையும் காதலைப் போன்றதே. நெருங்கி வருவது சௌகரியமாக இருந்தது. இரண்டாண்டுகள் நெருக்கமாக இருந்து விட்டு, எவரையும் காதலிக்காமல் இருந்தாலும் காதலிப்பீர்கள். காரணம் சூழ்நிலை.
அவனுடைய கேர்ள் ஃபிரண்டை நினைத்தேன். யார் அவள்? அவள் யாராக இருந்தாலும் என்னைப் போல்தான் இருப்பாள். அவன் மதுக்கூடத்தின் பணியாள் வேலையைவிட்டுவிட்டு, விடுமுறையில் பீச்சில் பொழுதைக் கழிக்க வேண்டும் என்றே அவளும் விரும்பக்கூடும். பெண்களை விட்டு நீங்குவதும் சிரமம். பெண்கள் பெரும்பாலும் நல்லவர்கள், நயமானவர்கள். அவர்கள் நயமற்றவர்களாக இருந்தால் அதைப் பற்றி அவர்கள் கவலை கொள்ளும்படி மற்றவர்கள் செய்து விடுவதால், பெண்களுக்கு நயமானவர்களாக இருக்கக் கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. சிரத்தையும் அக்கறையும். முன்யோசனையும். குப்பைகளை அகற்றி, கழிவறைகளைச் சுத்தப்படுத்தி, மேஜையில் உணவைக் கொண்டு வைத்து, உங்களுக்கான உடைகளை வாங்கி, இன்னும் என்னென்னவோ. உங்கள் மீது பேராவல் கொண்டவர்கள். எல்லாவற்றையும் மன்னிக்கிறார்கள். காரணம்: உங்களையும் உங்கள் தவறுகளையும் அனுமதிக்கிறார்கள். இதற்கெல்லாம் நீங்கள் சிரமப்பட வேண்டியதில்லை; சுத்தமாகவும் அழகாகவும் தோற்றமளித்தால் போதும்.
எப்போதேனும் அவன் மகிழ்ச்சியற்று இருந்திருப்பானா என்று யோசித்தேன். மகிழ்ச்சியற்று இருப்பதும் சௌகரியம்தான். உங்களுடைய மகிழ்ச்சியற்ற நிலைக்கு யாரும் வரமாட்டார்கள். அதற்காக நீங்கள் எதையும் செய்ய விரும்பவில்லை என்றால், நீங்கள் எதையும் செய்ய வேண்டியிருக்காது. ஏன் அந்தச் சௌகரியத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்? என்னிடம் நயமாக இருப்பதும் சர்வ் செய்வதும் அவனுடைய வேலை. நான்தான் தவறாகப் புரிந்து கொண்டேன்; அதை நாட்டம் என்று நம்பி விட்டேன்.
“வெள்ளிக்கிழமை இரவுகளில் அவள் வருவாள்” என்று கூடுதலான விஷயத்தைச் சொன்னார் அந்த முதியவர். “இங்கேதான் உட்கார்வாள்”
நானே பார்த்து விடுவது என்று முடிவெடுத்தேன்.
அடுத்த வெள்ளிக்கிழமை ரெஸ்டாரண்டுக்குப் போனபோது மதுக்கூடத்தில் இருந்த பெண் அவனுடையவள் என்று தெரிந்து கொண்டேன். அவனுடைய கேர்ள் ஃபிரண்ட். நான் விரும்பியது போலவே அவள் அழகாக இருந்தாள். அவனை கவனித்தேன். ஏதோ சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டிருந்தாள். என்ன சொல்கிறாள் என்று புரிந்துகொள்ள முயன்றேன்.
“போஸோ” என்றாள்.
பேபி, ஸ்வீட்டி, டார்லிங், ஹனி, என்றெல்லாம் விளிப்பதைக் கேட்டிருக்கிறேன். போஸோ என்று யாரும் அழைத்துக் கேட்டதில்லை. நிஜமாகவே அவள் மீது அவன் காதல் கொண்டிருக்கிறான் என்று எனக்குப் புரிந்தது. ஒருவருக்கு போஸோவாக இருப்பதென்றால், அவர் தன்னை எப்படி வேண்டுமானாலும் கூப்பிட அனுமதித்து, அவர் அப்படி கூப்பிட்டது போல இருப்பது என்று அர்த்தம். அவன் ஒரு போஸோவாக இருக்க விரும்பினான்.
ரெஸ்டாரண்டிலிருந்து தனியாளாகப் புறப்பட்டேன். இருண்ட ஒரு சந்துக்குப் போனேன். அங்கே ஒரு செங்கல் சுவரில் சாய்ந்தபடி கண்களை மூடிக் கொண்டேன். அவள் அவனை விளித்தவாறு நானும் சொல்லிப் பார்த்தேன். அவளுடைய வாயிலிருந்தது என் வாயிலும் இருக்க ஆசைப்பட்டேன்.
***
ஸொவாங்கம் தம்மவொங்ஸா (Souvankham Thammavongsa) தாய்லாந்தின் நாங் காய் (Nong Khai) அகதி முகாமில் 1978 ஆம் ஆண்டில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். How to Pronounce Knife என்ற சிறுகதை தொகுப்பு உள்ளிட்ட நான்கு நூல்களின் ஆசிரியர். The New Yorker, Harper's Magazine, The Paris Review, The Atlantic, Granta, and NOON உள்ளிட்ட ஏடுகளில் இவருடைய படைப்புகள் வெளியாகியுள்ளன.
***
ஒரு மதுக்கூடத்தின் பின்னணியில் அமைந்த இந்தக் கதை, தூரத்தையும் அடைய முடியாத நெருக்கத்தையும் குறித்த அழகான உணர்வுகளை திறம்பட வெளிப்படுத்துகிறது. நமக்கும் ஒரு உறுதியான பிணைப்பு இருக்கும் இதுபோலொரு கதையை வாசிக்கும் பொழுது நிச்சயம் உங்கள் பழைய நினைவுகள் ஏதாவதுக்கு ஒன்று உங்கள் மண்டைக்குள் சுழல ஆரம்பிக்கும்.
இந்தக்கதை எளிய, அற்புதமான, அதேசமயம் வாழ்க்கையின் ஆழங்களை வெளிப்படுத்தும் விதமாக அமைத்துள்ளது அவசியம் வாசியுங்கள் ரொம்ப நேரம் எடுத்துக் கொள்ளாது. மூன்றாவது சிறுகதையை சீக்கிரமே பதிவு செய்யுங்கள் நன்றி